நெடுஞ்சாலை வாழ்க்கை
கனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெடுஞ்சாலைகளில், மலைப்பாதைகளில் வெயில், மழை என பாராமல் பயணிக்கும் இந்த வாழ்க்கையை, விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ்வது இவர்களது இயல்பாகிவிட்டது. நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி ஓட்டுநர்கள் படும் இன்னல்களை இந்த நூல் எடுத்துரைக்கிறது. அவற்றில் ஒன்று - கொள்ளை; விதவிதமாக பணம் பறிப்பவர்கள் மத்தியில் பணத்தைப் பிரித்து ஆங்காங்கே ஒளித்துவைத்து தன்னையும் தன் உடைமைகளையும் காப்பாற்றுவதற்கே அன்றாடம் போராடுகிறார்கள். விபத்து, வழக்கு, போலீஸ், கொலை, கொள்ளை, நோய் என அனைத்தையும் தாண்டி இந்தத் தொழிலை இவர்கள் நேசிக்கிறார்கள். கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகள் இப்பணியில் தங்களது ஈடுபாட்டைச் செலுத்தியிருப்பவர்களும் உண்டு. திறமையான, அனுபவம்கொண்ட டிரைவராக இருந்தாலும், பயணப்படும் சாலையில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதைக் கவனித்துப் பயணிப்பது இவர்களுக்கான சவாலான விஷயம். பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் தரைவழிப் போக்குவரத்தான லாரி பயணத்தில் ஏற்படும் இன்னல்களைக் களைய, தேசிய நெடுஞ்சாலைகளுக்குத் தனி பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் நூலாசிரியர் கா.பாலமுருகன். லாரி ஓட்டுநர்கள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை விலக்கி, அவர்களின் உண்மையான நிலையை அவர்களுடன் பயணித்துப் பதிவு செய்திருக்கிறார். மோட்டார் விகடனில் வெளியான நெடுஞ்சாலை வாழ்க்கை, நூலாக்கம் பெற்று இப்போது உங்களையும் அழைத்துச் செல்லக் காத்திருக்கிறது!