சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்
உலகில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. எதை எதையோ தேடி அலையும் மனம் துன்பத்தில் உழல்கிறது. அந்த மனம், 'மனித சக்தியைத் தாண்டி வேறொரு சக்தி நம் துன்பத்தைப் போக்குமா' என்று ஏங்குகிறது. அது எந்த சக்தி? 'கடவுள்' என்பது பொதுவான பதிலாக இருக்கிறது. வெவ்வேறு கடவுள்களோடு பல்வேறு மதங்கள் தோன்றின. பிற தேசங்களில் பொருள், இன்பம் என்கிற இரண்டு அம்சங்களோடே வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இந்தியாவில்தான் அறம், பொருள், இன்பம், இவை தவிர வீடுபேறு என்பதும் இருக்கிறது. ஷீர்டி மகான் சாயிபாபாவின் போதனைகள் முன்னிறுத்துவது, மதங்களைக் கடந்த ஆன்மிகம். அவர் தங்கியிருந்த இடமோ இஸ்லாமிய கோயில். ஆனால், பரப்பிய ஆன்மிகமோ இந்து சமயம். ராம நவமி அன்று இஸ்லாமியர்களின் சந்தன விழாவை செய்யச் சொல்லி இரு மதத்தினருக்கிடையே நட்புறவை ஏற்படுத்தினார். பெற்றோர்கள் யாரென்றும், பிறப்பிடம் எதுவென்றும் தெரியாதவராக ஷீர்டியில் அவதரித்த பாபாவின் ஆன்மிகத் திளைப்பில் உறவானவர்கள் பலர். நாடி வந்தவர்களின் நோயைப் போக்கினார், பிறர் தரும் உணவு, பொருட்களைகூட பக்தர்களுக்கு வாரி வழங்கினார். பக்தரின் மன நிம்மதிக்கு வழிவகைச் செய்தார்.