என்றும் வாழும் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். - இந்த மந்திரப் பெயர், தமிழ்நாட்டு மக்கள் மனதில் நிலைத்துவிட்ட பெயர். எட்டாவது வள்ளல் எனப் புகழப்படும் எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் அவரை நெஞ்சில் வைத்து பூஜித்து வருகின்றனர் ஏழை எளிய மக்கள். தன் திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகளைச் சொன்ன எம்.ஜி.ஆர். நிஜத்திலும் அவ்வாறே வாழ்ந்து காட்டியவர். தான் இளம் வயதில் வறுமையில் வாடியதை மறக்காமல், அப்படி யாரும் ஏழ்மையில் வாடக்கூடாது என்பதால் தான் திரைத் துறையில் சம்பாதித்த வருமானத்தில் பெரும் பங்கை தன்னை நாடி வருவோருக்கு அள்ளி வழங்கி அகம் மகிழ்ந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை அவரின் ராமாபுரம் தோட்ட இல்லம், பசியாற்றும் அட்சய பாத்திரமாகவே திகழ்ந்துகொண்டிருந்தது. இப்படி ஏழை மக்களின் மனங்களில் ஏந்தலாக இருந்ததால்தான் அ.தி.மு.க.வை தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் எம்.ஜி.ஆரால் முதல்வராக முடிந்தது. 40 ஆண்டுகளாக எம்.ஜி.ஆரின் தனிப் பாதுகாவலராக இருந்த நூலாசிரியர் கே.பி.ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆருடனான தன் திரைப்படத் துறை அனுபவங்கள் பற்றியும் தனிப்பாதுகாவலராக இருந்த அனுபவங் களையும் இந்த நூலில் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். பற்றி அறியப்படாத தகவல்கள் பலவற்றை இந்த நூல் நமக்குத் தருகிறது. என்றும் வாழும் எம்.ஜி.ஆர் பற்றி இன்னும் அறியலாம் வாருங்கள்!