எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்
தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது. மக்களால் ‘புரட்சித் தலைவர்’ என்று அழைக்கப்பட்ட அந்த நபர் எம்.ஜி.ராமச்சந்திரன். தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வழங்கியது; சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது; தமிழக அரசியலில் பிரவேசித்து, பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தது; மக்களின் மனங்களில் இடம் பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடந்து ஆட்சி செய்தது; ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு என எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை, அவருக்கு மெய்க்காப்பாளராக முப்பது ஆண்டுகள் இருந்து பெற்ற அனுபவங்களை சரித்திரக் கதை சொல்வது போல கே.பி.ராமகிருஷ்ணன் இந்நூலில் சொல்லியிருக்கிறார். டைரி எழுதும் பழக்கம் கே.பி.ராமகிருஷ்ணனிடம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை, எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண் தொடங்கி எந்தெந்த நபர்களை எந்த தேதியில் சந்தித்தார், அவர்களுடன் எம்.ஜி.ஆர் என்ன பேசினார் என அத்தனை செய்திகளையும் விவரமாகக் குறிப்பிட்டு இருக்கிறார். எம்.ஜி.ஆரின் சரித்திரத்தைச் சொல்லும் இந்த அரிய பொக்கிஷத்தை நூலாகத் தருவதில் பெரும் உழைப்பை நல்கி பங்காற்றியவர் எஸ்.ரஜத். கே.பி.ராமகிருஷ்ணன் மனதில் கிடந்த புதையலை, எம்.ஜி.ஆர் இறந்து பத்தொன்பது ஆண்டுகள் கடந்த பின்பு, பேட்டி கண்டு சுவைபட விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார். ‘எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்’ எனும் இந்த நூல் எம்.ஜி.ஆரின் பல்லாயிரம் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகம் தருவதோடு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலகட்ட சினிமா துறையையும் அரசியல் நிலவரத்தையும் அறிய உதவும் ஆவணப் பெட்டகமாகவும் விளங்கும் என நம்புகிறோம்.